புங்குடுதீவு ஆலயத்தில் முற்றாக அழிக்கப்பட்ட புங்கை மரங்கள்! மக்கள் விசனம்
புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் சுற்று சூழல் வீதியில் காணப்பட்ட நிழல் தரும் புங்கை மரங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம்(08) இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது. சூழகம் அமைப்பினரால் 2021 ஓகஸ்ட் மாதம் 61 புங்கை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக பலமாத காலங்கள் நன்னீர் ஊற்றப்பட்டு செழிப்பாக வளர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த ஆலயத்தின் திருவிழா இடம்பெறுகின்ற காலப்பகுதியில் இவ்வீதியில் அடியார்கள் அடைகின்ற துன்பங்களை கருத்திற் கொண்டும், பசுமையினை உருவாக்கும் நோக்குடனும் சூழகம் அமைப்பினரால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி ஆலய வீதியில் காணப்படுகின்ற இந்த மரக்கன்றுகள் சுவர்கள் மற்றும் மதில்கள் போன்றவற்றிற்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தாத வகையில் காணப்படுகின்ற போதிலும் அதனை வேருடன் அழிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கிராமத்தினை சேர்ந்த சிலரே கடந்த இரண்டு ஆண்டுகளிற்குள் மூன்று தடவைகள் அந்த புங்கைகளை அழிக்கும் முயற்சியினை மேற்கொண்டுள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் நின்று விடாது, மேலும் நேற்றைய தினம் இரவு சாராயம் போன்ற மதுபான வகைகளை குடித்து விட்டு புங்கை மரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.