மாமனார், மாமியாரை சூட்சமமாக கொன்ற வைத்தியர் ; இறுதியில் வழங்கிய பகீர் வாக்குமூலம்
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் பத்ராவதியில் நிகழ்ந்த முதிய தம்பதியின் மர்ம மரணம், தற்போது ஒரு திட்டமிட்ட இரட்டைக்கொலையாக உருவெடுத்துள்ளது.
78 வயதான சந்திரப்பா மற்றும் அவரது மனைவி ஜெயம்மா ஆகியோர் தங்கள் வீட்டில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.

மூட்டு வலிக்கு ஊசி
இந்த வழக்கை விசாரித்த பொலிஸார், சந்திரப்பாவின் மருமகனும் ஆயுர்வேத மருத்துவருமான மல்லேஷை அதிரடியாக கைது செய்துள்ளனர். மருத்துவ பட்டதாரியான மல்லேஷ், கடன் சுமையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தனது மாமா சந்திரப்பாவிடம் 15 லட்சம் ரூபாய் கடன் கேட்டபோது அவர் மறுத்ததால், வீட்டிலுள்ள தங்கத்தை திருட மல்லேஷ் திட்டமிட்டிருக்கிறார்.
சம்பவத்தன்று தம்பதியின் உடல்நிலையைச் சோதிப்பது போல நடித்த மல்லேஷ், அவர்களின் மூட்டு வலிக்கு ஊசி போட்டால் சரியாகிவிடும் என்று நம்ப வைத்துள்ளார். அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்துக்காக பயன்படுத்தப்படும் மருந்தை, அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக இருவருக்கும் செலுத்தியுள்ளார்.
ஊசி போட்ட ஐந்து நிமிடங்களிலேயே தம்பதி இருவரும் மயங்கி உயிரிழந்தனர். அவர்கள் இறந்தவுடன் உடலில் இருந்த சுமார் 80 கிராம் தங்க நகைகளை திருடிக்கொண்டு, சடலங்களை தனித்தனி அறைகளில் கிடத்திவிட்டு மல்லேஷ் தப்பியோடினார்.
திருடப்பட்ட நகைகளை அடகு வைத்து தனது கடன்களை அவர் அடைத்துள்ளார். ஆனால், 24 மணி நேரத்திற்குள் கொலையாளியை அடையாளம் கண்ட சிவமோகா போலீஸார், அவரை சிறையில் அடைத்தனர். மருத்துவ அறிவை தவறாக பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.