பறக்கும் விளக்குகளின் ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விசேட விழாக்களின் போது, சிலர் பொழுதுபோக்குக்காக பறக்கும் விளக்குளைப் பறக்கவிடுவதுடன், அவற்றை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொலிஸார், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
எரியும் தீபந்தகளுடன் கூடிய பல்வேறு அளவிலான விளக்குகள் வானில் பறக்கவிடப்படுவதுடன், இந்த விளக்குகள் சில சந்தர்ப்பங்களில் தரையில் விழுந்து எரியும் அபாயம் காணப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுபோன்ற சூழ்நிலையில், இந்த பறக்கும் விளக்குகள் தீப்பிடித்து பட்டாசு தொழிற்சாலைகள், பெட்ரோல் நிலையங்கள், எரிபொருள் சேமிப்பு பகுதிகள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் போன்றவற்றில் விழுந்தால், அந்த இடங்களுடன், உயிர்களுக்கும் சேதம் ஏற்படலாம் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
கொழும்பில் உள்ள காலி முகத்திடல் சதுக்கத்திலும் இந்த முறையில் விளக்குகளை ஏற்றுவதை பொலிஸார் கவனித்துள்ளதுடன், இதுபோன்ற பறக்கும் விளக்குகள் தீப்பிடித்து நகரத்தில் உள்ள முக்கிய இடங்கள் அல்லது குடியிருப்பு பகுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் விழுந்து, ஏதேனும் ஒரு வழியில் தீப்பரவல் ஏற்பட்டால், பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் என பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதன்படி, வான விளக்குகளைப் பறக்கவிடும் போது அதன் பரவல் மற்றும் ஆபத்தான நிலைமைகள் குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்குத் முன்கூட்டியே அறிவிக்கும் முறையைப் பின்பற்றுவதன் மூலம், உயிர் மற்றும் சொத்து இழப்பைத் தடுக்கும் வாய்ப்பு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த வான விளக்குகளைப் பறக்கவிடும் போது ஏற்படக்கூடிய ஆபத்தான சூழ்நிலை குறித்து பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்படுவதுடன், விசேட சந்தர்ப்பங்கள் உட்பட வான விளக்குகளைப் பயன்படுத்தும் போது மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுமாறு பொலிஸார், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.