காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நீதி வழங்க அரசு உறுதி
காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு, அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாண சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பணியாளர்கள் சவாலான சூழ்நிலைகளில் பணியாற்றி வருவதாக பாராட்டிய அமைச்சர், காணாமல் போனவர்கள் வெறும் எண்ணிக்கைகள் அல்ல என்றும், அவர்களது குடும்பங்கள் நீண்டகால மனவேதனையுடனும் எதிர்பார்ப்புடனும் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இதுவரை 2,452 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவாகியுள்ளதுடன், பதிவு செய்யப்படாத பல சம்பவங்களும் இருக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
சில குடும்பங்களில் இருவர் அல்லது மூவர் வரை காணாமல் போன சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். “உடல் காயங்களுக்கு மருந்து வழங்க முடியும்.
ஆனால் மனக் காயங்களுக்கு உண்மையான மருந்து அன்பும் நீதியும் மட்டுமே” என வலியுறுத்திய அமைச்சர், காணாமல் போனோரின் உறவினர்களின் வேதனையை பணத்தால் ஈடுசெய்ய முடியாது என்றார்.
மேலும், தென் இலங்கையிலும் 1987 முதல் 1989 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டதாக நினைவூட்டிய அவர், வடக்கும் தெற்கும் ஒரே விதமான துயரத்தை பகிர்ந்து கொள்கின்றன என குறிப்பிட்டார்.
மக்கள் எதிர்நோக்கும் இந்த மனவேதனைக்கு உரிய தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என தெரிவித்த அமைச்சர், தற்போதைய அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.

சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன், மீள்குடியேறிய மக்களுக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தை முக்கிய அபிவிருத்தி மையமாக மாற்றும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இன வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒன்றுபட்டு வாழக்கூடிய நல்லிணக்கச் சமூகத்தை உருவாக்குவதே இலக்காக இருப்பதாக கூறினார்.
இந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் உண்மை கண்டறிதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தரல் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதனிடையே, கலந்துரையாடலில் பங்கேற்ற சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், யுத்தக் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றிய விசாரணைகள், தற்போதைய சவால்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
அதற்கு பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, உண்மை கண்டறிதல், பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.