யாழில் பௌத்த விகாரைக்கு எதிராக போராடுபவர்கள் அடிப்படைவாத குழுவினர் ; விமல் வீரவன்ச
யாழ்ப்பாணம் - திஸ்ஸ விகாரைக்கு முன்னால், பௌத்த விகாரைக்கு எதிராகப் போராடுபவர்கள் அடிப்படைவாதக் குழுவினர். அவர்கள் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை? என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் திஸ்ஸ விகாரைக்கு முன்பாக இடம்பெறும் போராட்டங்கள் பௌத்த தர்மம் மீதான தாக்குதலாகும்.
பௌத்த சாசனம் மீது தாக்குதல்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பௌத்த சாசனம்மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.
அதன் உச்சக்கட்டமாக வெசாக் போயா தினத்தன்று யாழ். திஸ்ஸ விகாரைக்கு முன்னால் மத அடிப்படைவாதக் குழு அடாவடியில் ஈடுபட்டுள்ளது. வழிபாட்டுக்கு சென்ற பௌத்தர்கள் உள்ளே செல்வதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பொலிஸார் இருந்தும் அவர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டனர். அதாவது அடிப்படைவாதிகளுக்கு தற்போது புத்துயிர் வந்துள்ளது. இந்த அரசாங்கம் தமக்கு எதையும் செய்யாது என துணிவில் அடிப்படைவாதிகள் செயற்பட ஆரம்பித்துள்ளனர் என மேலும் தெரிவித்தார்.