யாழ். கீரிமலையில் குவிக்கப்பட்ட குப்பைகளை அகற்றக் கோரி கவனயீர்ப்பு
யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு கோரி, ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று (12) புதன்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில், சுண்ணக்கல் அகழ்வினால் உருவான பாரிய பள்ளங்களுக்குள் வலி. தெற்கு பிரதேச சபையினால் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக மீள அகற்றுமாறு கோரி, வலி. வடக்கு பிரதேச சபையின் 34 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, வடமாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட செயலாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ஆகியோரிடம் கடந்த வாரம் முறையிட்டிருந்தனர்.
எனினும், இதுவரை இந்த விடயம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆடி அமாவாசை தினமான நேற்று, குப்பைகள் கொட்டப்பட்டுள்ள பகுதியில் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, குறித்த குப்பைக் குவியல்களால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும், விழிப்புணர்வு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இந்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்துகொண்டார்.
ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கான பிதிர்க்கடன்களை நிறைவேற்றுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கீரிமலை பகுதிக்கு வருகை தருவது வழக்கமாகும்.

அத்துடன், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு, பக்தர்கள் கீரிமலைப் பகுதியை ஊடறுத்து தீர்த்தமாடச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.
இதனைக் கருத்திற்கொண்டு, ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னதாக கீரிமலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என ஏற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனால், குறித்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றி, எதிர்காலத்தில் அப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



