திருகோணமலையில் வைத்தியசாலைக்கு முன் கவனயீர்ப்புப் போராட்டம்
திருகோணமலை வைத்தியசாலையின் தரமான சேவையை உறுதிப்படுத்தக் கோரி அமைதியான கவனயீர்ப்புப் போராட்டமொன்று நேற்று (05) வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.
இக் கவனயீர்ப்பு போராட்டத்தினை பொது மக்கள் சமூக நலன் விரும்பிகள் இணைந்து மேற்கொண்டனர்.
சத்திர சிகிச்சைக் கூடம்
வைத்தியசாலையின் தரத்துக்கேற்ப சத்திர சிகிச்சைக் கூடங்களும் தரம் உயர்த்தப்பட வேண்டும், சிற்றூழியர்களின் பற்றாக்குறை நிவர்த்திசெய்யப்பட வேண்டும், வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும், வைத்தியர்களுக்கான விடுதி வசதிகள் வேண்டும், நோயாளிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும்.
அதுமட்டுன்றி மகப்பேற்றுக்காக கட்டப்பட்ட சத்திர சிகிச்சைக் கூடம் இயக்கப்பட வேண்டும், எலும்பு முறிவுக்காக தனியான இடம் வேண்டும், ஒரு திடீர் மரண விசாரணை அதிகாரி போதாது, பிணஅறையில் வேலை செய்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும், , பிரசவத்துக்காக வரும் தாய்மார்களைத் தகாத வார்த்தைகளால் பேசாதீர்கள் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இவ் வைத்தியசாலையில் அண்மையில் தனி நபர் ஒருவரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.