புங்குடுதீவில் கொலை செய்யப்பட்டவருக்கு நீதி கோரி போராட்டம்
யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டவரிற்கு நீதிகோரி பொதுமக்கள் இன்று (15) வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 ஆம் அன்று தனது வீட்டில் இருந்தவேளை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை அற்புதராசாவின் கொலைக்கு நீதிவேண்டியும் கொலையாளிகளை விரைந்து கைதுசெய்யக்கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புங்குடுதீவு தனியார் போக்குவரத்து சங்கத்தினர் மற்றும் மக்கள் இணைந்து இன்றையதினம் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுத்த கொடியை பறக்கவிட்டு, பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் போராட்டம் காரணமாக புங்குடுதீவு - யாழ்பாணம் இடையேயான போக்குவரத்து சேவைகள் இன்றையதினம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.