ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு கோரி ஜனாதிபதி செயலகம் முன்பாகத் தொடரும் போராட்டம்
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பௌத்த தேரர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று காலை வரையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி நடைபவனியாகச் சென்ற பௌத்த தேரர்கள், ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டதாகவும், போராட்டத்தில் பங்கேற்ற சில பௌத்த பிக்குகளுக்கு இடையிலும் வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் கள நிலவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தொடரும் இந்தப் போராட்டம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
