வேலை தேடும் அப்பாவிப்பெண்கள் குறி! வாட்ஸ்அப் மூலமாக விபச்சாரம் நடத்திய கும்பல்
இந்தியாவின் ஐதராபாத்தில் வாட்ஸ்அப் மூலமாக விபச்சாரம் நடத்திய கும்பல் பொலிசில் சிக்கியுள்ளது.
விபச்சார தொழில் செய்வதற்காக கால்சென்டர்கள் வைத்திருப்பதும் ஏறத்தாழ 14,000- க்கும் மேற்பட்ட பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் வாட்ஸ்அப் விபச்சாரம் நடப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணை போலீசார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தெலங்கானாவின் பேகம்பேட்டையை சேர்ந்தவர் முகமது சல்மான்கான் என்கிற சமீர். இவர் ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது விபசார கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஓட்டலில் தங்குவதை கவனித்த அவர் சுலபமாக பணம் சம்பாதிக்க இது சிறந்த வழி என முடிவு செய்துள்ளார்.
மேலும் அதே நினைப்பில் இருந்த இவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் ஆர்னவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு சோமாஜி கூடா பகுதியில் இந்த வாட்ஸ்அப் விபச்சார தொழிலை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணையில் அதிரவைத்த தகவல்
தொடர்ந்து நாடு முழுவதும் பல வாட்ஸ்அப் குழுக்கள் தொடங்கி இந்த தொழிலை செய்ய தொடங்கியுள்ளனர். அதன்படி, ஏறத்தாழ ஒவ்வொரு வாட்ஸ்அப் குழுவிலும் 300 பேர் வெவ்வேறு பகுதிகளில் நடத்தி வந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது இதற்கென அந்தந்த ஊர்களில் கால் சென்டர்களும் நடத்தியுள்ளனர். வேலை தேடி வரும் அப்பாவி பெண்களை வேலை வாங்கி தருவதாக கூறி புகைப்படம் எடுத்து அந்த படத்தை வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிடுவர்.
அவற்றை பார்க்கும் வாடிக்கையாளர்கள் கால் சென்டருக்கு தொடர்புக் கொண்டு எந்த பெண் வேண்டுமென கூறுவார்கள். கால் சென்டரில் உள்ளவர்கள் இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும், இந்த ஹோட்டலில் இந்த அறையில் இத்தனை மணிக்கு பெண் வருவார் என தெரிவிப்பார்கள்.
இதில் கிட்டத்தட்ட 14,190 இளம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கால் சென்டர் ஐதராபாத், டெல்லி, பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ளது.
மேலும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மராட்டியம், டெல்லி, கொல்கத்தா, அசாம், தாய்லாந்து, நேபாளம், வங்காள தேசம், பாகிஸ்தான், ரஷியா, போன்ற வெளிநாட்டு பெண்களையும் வைத்து விபச்சாரம் செய்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.