தங்கப் பதக்கம் வென்ற ரூமேஷ் தரங்கவிற்கு பதவி உயர்வு!
தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடிக்கொடுத்த இலங்கை விமானப் படையின் ஈட்டி எறிதல் வீரரான கோப்ரல் ரூமேஷ் தரங்க, சார்ஜன்ட் (Sergeant) தரநிலைக்குப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தமைக்காக, அவரைப் பாராட்டி இந்த பதவி உயர்வு இன்று (05) விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவினால் வழங்கப்பட்டது.

கிளாஸ்கோவில் உள்ள ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், ரூமேஷ் தரங்க 89.75 மீற்றர் தூரம் எறிந்து தனது திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.
தரங்கவின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் விமானப்படைத் தளபதி அவருக்கு சிறப்பு பணவிருதையும் வழங்கியதுடன் , ரூமேஷ் தரங்கவின் வெற்றிக்கு ஆதரவாகவும் பங்களிப்பாகவும் இருந்த அவரது பயிற்றுவிப்பாளர் டோனி பிரசன்ன மற்றும் பிசியோதெரபிஸ்ட் கோப்ரல் சந்திம குருசிங்க ஆகியோருக்கும் பணவிருதுகள் வழங்கப்பட்டன.
ரூமேஷ் தரங்க ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், பாலித பண்டார ஆண்களுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான தட்டு எறிதல் (para discus throw) போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.