தாயின் சடலத்தைக்கூட ஒப்படைக்க மறுத்த தனியார் வைத்தியசாலை ; பொலிஸாரை நாடிய மகள்
நோய்வாய்ப்பட்ட தாயைக் காப்பாற்றும் நோக்கில் கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளித்த மகள், தாயை இழந்த சோகத்திற்கு மத்தியில் பாரிய சட்டச் சிக்கலுக்கும் முகங்கொடுத்துள்ளார்.
தாயின் சிகிச்சைக்காகப் பெருந்தொகைப் பணத்தைச் செலுத்திய போதிலும், எஞ்சியிருந்த வைத்தியசாலைக் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டு மகளுக்கு எதிராக வைத்தியசாலை நிர்வாகம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இவ்வழக்கில் சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள ராஜகருணா என்ற பெண்ணை, 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு மாளிகாகந்த நீதிவான் ஜனிதா ரோஷணீ அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

ராஜகிரிய, நாவல பகுதியைச் சேர்ந்த லீலானி சுனேத்ரா என்ற பெண் சுகயீனமடைந்ததைத் தொடர்ந்து, அவரை கொழும்பு நோரிஸ் கெனல் வீதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்க அவரது மகள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கமைய, கடந்த ஓகஸ்ட் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை சுமார் ஒன்றரை மாத காலம் குறித்த வைத்தியசாலையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் வைத்தியசாலையினால் சமர்ப்பிக்கப்பட்ட மொத்த சிகிச்சைக் கட்டணம் 22,406,313 ரூபாயைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் தள்ளுபடியைத் தவிர்த்து, மகள் தனது தாயின் சிகிச்சைக்காக 11.8 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலுத்தியுள்ளார்.
தாயின் பூதவுடலைப் பெறுவதிலும் சிக்கல்
எனினும், தாயின் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, செலுத்தப்படாமல் எஞ்சியிருந்த ஒரு கோடியே 6 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை அடிப்படையாகக் கொண்டு, வஞ்சகமான முறையில் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டி மகளுக்கு எதிராக வைத்தியசாலை நிர்வாகம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
மறுபுறம், தாயின் மரணத்தால் பெரும் துயரத்தில் இருந்த மகளுக்கு, எஞ்சிய வைத்தியசாலைக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியமை காரணமாக மற்றுமொரு சிக்கலும் ஏற்பட்டுள்ளது.
குறித்த கட்டணத்தைச் செலுத்தாத நிலையில், தாயின் பூதவுடலை இறுதிக் கிரியைகளுக்காக ஒப்படைக்க வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சுமார் இரண்டு நாட்களாகத் தாயின் பூதவுடல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்துள்ளது. இதனையடுத்து, மகள் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார்.
இந்த நிலையில், மாளிகாகந்த பதில் நீதிவான் பிரேமலால் அத்துக்கோரள, உடனடியாகப் பிரேதப் பரிசோதனையை நடத்தி பூதவுடலை மகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தாயின் சிகிச்சைக்காகப் பெருந்தொகைப் பணத்தைச் செலவிட்ட மகள், அவரது மரணத்திற்குப் பின்னர் எஞ்சிய வைத்தியசாலைக் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்ட வழக்கையும் எதிர்கொண்டுள்ளமை இச்சம்பவத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.