தனியார் வங்கியின் நிர்வாக அதிகாரி அதிரடியாக கைது; காரணம் என்ன?
நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தனியார் வங்கி ஒன்றின் நிர்வாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள்
சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்காக வழங்கப்பட்டதாக கூறப்படும் அனுமதிப்பத்திரங்கள் சில, சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அவை சட்ட ரீதியாக வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.