ஞானசாரருக்கு கைதி உடை; நாடாளுமன்றில் வெடித்த சர்ச்சை!
ஞானசாரருக்கு கைதி உடை; நாடாளுமன்றில் வெடித்த சர்ச்சை! கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் காவி உடையை அகற்றி, அவருக்கு கைதி உடையை அணிவித்து யாரை மகிழ்விக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று சர்வசன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நாட்டை வீழ்த்தி அரசியல்
எமது சர்வசன அதிகாரம் கட்சியானது நாட்டைக் கட்டியெழுப்பும் எதிர்க்கட்சி யாகச் செயற்படுவதற்கேயன்றி நாட்டை வீழ்த்தி அரசியல் செய்வதற்காக செயற்படவில்லை.
என்னையும் உள்ளே போடுவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. ஆனால் உள்ளே போடுமளவுக்கு நான் கெட்டவன் அல்ல. இதேவேளை இப்போது இந்த ஜனநாயகம் தொடர்பில் பெரும் சந்தேகங்கள் எங்களிடையே எழுந்துள்ளன.
எமக்கு அச்சம் ஏற்படுமளவுக்கு சர்வாதிகார அடிப்படையில் தமது பொறிமுறைகளை செயற்படுத்த முன்னெடுக்கும் முயற்சிகள் மன அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன. தற்போது பெளத்த சாசனத்துக்கு சவால்கள் ஏற்படும் என்று அனைவரும் நினைக்கின்றனர்.
அவ்வாறான எண்ணங்களை இல்லாமல் செய்யும் பொறுப்பு அரசாங்கத்துக்குரியது. ஞானசார தேரருக்கு மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரின் காவி உடையை அகற்றி, கைதி உடையை அணிவித்து யாரை மகிழ்விக்கப் பார்க்கின்றீர்கள்? இதனால் இந்த நாட்டு மக்களும் ஏனைய மதத்தவர்களும் பெரும் கவலைகளுக்குள்ளாகியுள்ளனர். பொய்களால் ஒருபோதும் இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் விசனம் வெளியிட்டார்.