விசேட அதிரடிப்படையினர் மீது கைதி தாக்குதல்; சோதனையிட்டதால் கோபமாம்!
அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து காலி சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கைதி ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மூவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி காலி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைக்காக காலி சிறைச்சாலைக்கு பஸ்ஸில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

கதிரை மற்றும் இரும்பு பொருட்களால் தாக்குதல்
இதன்போது ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மூவர் குறித்த கைதியை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
கோபமடைந்த கைதி, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மூவரையும் கடும் வார்த்தைகளால் திட்டி, கதிரை மற்றும் இரும்பு பொருட்களால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனையடுத்து காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மூவரும் இது தொடர்பில் ரத்கம பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.