ஜனாதிபதி செயலக சம்பள விவகாரம் ; சுகீஸ்வர பண்டாரவுக்கு நீதிமன்ற உத்தரவு
புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து வேதனம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இன்று கைது செய்யப்பட்ட பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

விசாரணைகளின் படி, சுகீஸ்வர பண்டார கடந்த 2022 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஜனாதிபதி ஒருவரின் செயலாளராக பணியாற்றியுள்ளார்.
அதே காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்தின் திட்டப் பணிப்பாளராகவும் கடமையாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளுக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் முன்னெடுத்து வரும் நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.