ஜனாதிபதி காற்சட்டையை எப்படி அணிவது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் !
ஹிட்லர் பற்றிக் கதைப்பதற்கு முன்னர் காற்சட்டையை எப்படி சரியாக அணிவது என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புரிந்துகொள்ள வேண்டும் என ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி .லால்காந்த தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பதை ராஜபக்ஷக்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நேற்றையதினம் கொத்மலை மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
"நாட்டை விட்டோடிய பஸில் ராஜபக்ஷ அண்மையில் நாடு திரும்பினார். பலமான அரசியல் இயக்கத்தை அவர் உருவாக்க போவதாக சிலர் கூறித்திரிகின்றனர். விமான நிலையம் வந்த பஸிலுக்கு அவரின் சகாக்கள் மற்றும் அடியாட்களால் அரச அனுசரணையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.
ஆனால், தான் நாட்டைவிட்டு செல்ல முற்படுகையில் விமான நிலைய ஊழியர்கள் தன்னை எப்படி கவனித்தார்கள் என்பதை பஸில் ராஜபக்ச மறந்துவிடக் கூடாது எனவும் லால்கந்த குறிப்பிட்டார்.
அதோடு மக்கள் போராட்டம் இன்னமும் ஓயவில்லை என்றும் கோரிக்கைகள் நிறைவேறாமல் உள்ளதாகவும் கூறிய அவர் கொள்ளையர்களும், பொருளாதாரத்தை நாசமாக்கியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார் .
மேலும் கொள்ளையடிக்கப்பட்ட வளங்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். இதனையும் பஸில் உள்ளிட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கே.டி .லால்காந்த இதன்போது குறிப்பிட்டார்.