சர்ச்சைக்குரிய சட்டங்கள் குறித்து ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு
பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தச் சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பொதுமக்கள் நிராகரிக்கும் சட்டங்களால் எந்தப் பயனும் இருக்காது என்றும் அவர் கூறினார்.
இன்று (17) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் 28ஆவது தேசிய ஆசிரியர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதி இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறுகையில்,
"பெற்றோர்களின் குழந்தைகள் மீதான எதிர்பார்ப்புகளை நியாயமாகவும் நீதியாகவும் நிறைவேற்ற வேண்டும். இதற்காக, நாங்கள் பாரிய கல்வி சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தியுள்ளோம்.
சில சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், ஒரு விடயத்தை தெளிவாகக் கூறுகிறேன்: பொதுமக்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன, எனக்காகவோ அல்லது நாடாளுமன்றத்திற்காகவோ அல்ல. பொதுமக்கள் உடன்படாத எந்தச் சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என உறுதியளிக்கிறேன்.
சட்டங்கள் மக்களுக்காகவே இயற்றப்படுகின்றன. மக்கள் அவற்றை ஏற்கவில்லை என்றால், அந்தச் சட்டங்களால் எந்தப் பயனும் இருக்காது. ஆட்சியாளர்களின் நலன்களுக்காக அல்ல, மக்களின் நலன்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்."