சர்வதேச நாணய நிதியத்தின் முக்கியஸ்தருடன் கலந்துரையாடிய ரணில்!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) ஆகியோருக்கு இடையில் சூம் தொழிநுட்பத்தின் ஊடாக நேற்று (02-03-2023) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கையானநம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருகின்றது.
அண்மையில் சீனப் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜனாதிபதியுடன் இந்த கலந்துரையாடலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ப்ளூம்பெர்க் செய்தியின் சமீபத்திய அறிக்கையின்படி, சீனப் பிரதமர் லீ கெகியாங், IMF நிர்வாக இயக்குனருடன் ஒரு கலந்துரையாடலின் போது கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பதற்காக, பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை, பாகிஸ்தான் போன்று, கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கு ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான பணிகளை மேற்கொள்வதாக அதன் போது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.