உண்மைக்கு மாறான தகவலையே வழங்கிய ஜனாதிபதி ; வி.எஸ்.சிவகரன் சூளுரை
மன்னாரில் வைத்து ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கி விட்டுச் சென்றுள்ளார்.தேர்தல் மேடையில் வாக்கு பெறுவதற்காக நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசினுடைய ஆட்சி முறைமைக்கான அவமானம் ஆகும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று (18) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னாரில் நேற்று முன்தினம் (17) தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க காற்றாலை விடயம் சம்பந்தமாக முன்னுக்கு பின் முரணான தகவலை வழங்கி விட்டுச் சென்றுள்ளார்.
அவருடைய தகவலை பார்க்கின்ற போது கிராமத்து பழ மொழியாக கொய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம், உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம் என்பது தான் ஞாபகம் வருகின்றது.
அவரது கதையும் அவ்வாறே அமைந்துள்ளது. காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வு போன்ற திட்டங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருக்கிறது என்கிற செய்தியை அரசாங்கம் அரச அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
அது மாத்திரம் இல்லாது 16-01-2025 அன்று மாவட்டச் செயலகத்தில் காற்றாலை திட்டம் சம்பந்தமான கூட்டம் நடத்தப்பட்டு, தற்காலிகமாக குறித்த திட்டத்தை இடை நிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதன் பின்னர் 28.01.2025 அன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டது.ஆனால் குறித்த தீர்மானங்கள் எவையும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது கூட மன்னார் சௌத்பார் பகுதியில் காற்றாலை மின் திட்டத்திற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன.
ஆனால் ஜனாதிபதி நேற்று முன்தினம் (17) கூட்டத்தில் தெரிவித்தார் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நடைபெறவில்லை என்றும். தற்போது நான்கு காற்றாலைகள் அமைக்கும் வேலைத்திட்டம் இடம் பெற்று வருகிறது.
அதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. மேலும் கணிய மணல் அகழ்வு நடவடிக்கைகளும் இடம் பெற்று வருகிறது. அதற்கான சுற்றாடல் மதிப்பு அறிக்கை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மூன்று தடவை அவர்கள் கள ஆய்வுக்கு வந்த போது திருப்பி அனுப்பப்பட்ட போதும் கூட அந்த திட்டத்தை அரசு கைவிடுவதாக இல்லை. மூன்று தடவை அவர்கள் கள ஆய்வுக்கு வந்த போது திருப்பி அனுப்பப்பட்ட போதும் கூட அந்த திட்டத்தை அரசு கைவிடுவதாக இல்லை.
மூன்றாவது திட்டமான கரையோரத்தில் இருந்து மணல் அகழ்வு செய்வதற்கான நில அளவீடு செய்வதற்கு அரச திணைக்களங்கள், அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அதனை வழங்குவதற்கான துரித நடவடிக்கை இடம் பெற்று வருவதாக அறிகின்றோம்.
குறித்த மூன்று திட்டங்களும் மன்னாரிலே நடைபெறுவதற்கும், நடைபெற்றுக் கொண்டிருப்பதற்குமான சூழலையே கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு அவரது கட்சிக்காரர்கள் அல்லது அரச அதிகாரிகள் தவறான தகவல்களை வழங்குகின்றார்கள்.
அல்லது ஜனாதிபதி இதனை அரசியல் மேடையாக பயன்படுத்துகின்றார் என தெரியவில்லை.
மன்னாரில் வைத்து ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கி விட்டுச் சென்றுள்ளார். தேர்தல் மேடையிலே வாக்கு பெறுவதற்காக நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசினுடைய ஆட்சி முறைமைக்கான அவமானம் ஆகும்.
இடது சாரித்துவத்தில் ஆட்சி நடத்துகின்றோம் என கூறுகின்றவர்கள் உண்மைக்கு மாறான தகவல்களை களத்தில் ஒன்று இடம் பெற வார்த்தைகளில் இன்னும் ஒன்றை பேசுவது என்பது ஜனநாயக விரோதம் ஆகும்.
எனவே இவ்விடயங்களை ஜனாதிபதி உடனடியாக கவனத்தில் எடுத்து அவர் கூறியது போல் இத்திட்டத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.குறைத்த பட்ச சூழல் பாதிப்போடு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என கூறி இருந்தார்.
இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த கூடாது என கடந்த 2 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம். மன்னார் மக்கள் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதியின் கருத்து குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதி என்.எம்.ஆலம் ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்தனர்.