வடக்கில் இனவாதம் பேசும் ஜனாதிபதி அநுர ; சபையில் கொந்தளித்த நாமல்
விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராடவில்லை. கதிர்காமத்துக்கு செல்வதற்கு தமிழர்களுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது. வடக்குக்கு சென்று ஜனாதிபதி இனவாதம் பேசக்கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற தித்வா புயலின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புதிய கல்விக் கொள்கை
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.போராட்டத்தில் ஈடுபடவில்லை. தவறுகளை திருத்திக் கொண்டு சிறந்த முறையில் புதிய கல்வி கொள்கையை அமுல்படுத்துமாறு குறிப்பிட்டோம்.
ஆளுங்கட்சியில் படித்தவர்கள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. ஆகவே கல்விக் கொள்கையை சிறந்த முறையில் தயாரியுங்கள்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் பற்றி பேசப்படுகிறது. புத்தர் சிலை விவகாரத்தில் தேரர்கள் இன்றும் சிறையில் உள்ளார்கள். ஆனால் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர்கள் கைது செய்யப்படவில்லை.
நாங்கள் விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராடவில்லை.
தமிழ் மக்களுக்கு கதிர்காமத்துக்கு செல்வதற்கு முழுமையாக சுதந்திரம் உள்ளது. ஜனாதிபதி வடக்குக்கு சென்று இனவாதத்தை தூண்டிவிட கூடாது. அரசாங்கம் தமக்கு ஏற்றாட் போல் சட்டத்தை பயன்படுத்திக் கொள்கிறது.
கடந்த கால ஊழல் மோசடிகள் குறித்து அவதானம் செலுத்துவதை போன்று 323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பிலும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.