அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு வெளியான முக்கிய தகவல்
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயப்படுத்தும் சட்டம், நூறு சதவீதம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, நெடுஞ்சாலைகளில் பிரவேசிக்கும் வாகனங்களின் சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டிகளை கட்டாயம் அணிய வேண்டுமென பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர வலியுறுத்தியுள்ளார்.

ஆசனப்பட்டிகள்
அத்துடன், வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஆசனப்பட்டிகளை பொருத்தாவிட்டால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த ஒழுங்குமுறை, கடந்த முதலாம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக அமுல்படுத்தப்பட்டது.
இதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து தரப்பினரும் தற்போது ஆசனப்பட்டிகளை அணிய வேண்டுமென பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
பயணி ஒருவர் ஆசனப்பட்டியை அணியாதிருப்பது கண்டறியப்படுமாயின், பயணி மற்றும் சாரதி இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக பயணிகளுடன் பயணிக்கும் பேருந்துகள் நெடுஞ்சாலைகளுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்படாது. இதற்கமைய, மேலதிக பயணிகள் நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு முன்பாக இறக்கிவிடப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொழும்பு மற்றும் அதைச் சூழவுள்ள வீதிகளில் உந்துருளி பந்தயங்கள் உடனடியாக நிறுத்தப்படும் எனவும், இதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.