ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் சிறை செல்வார்; மிரட்டும் முன்னாள் அமைச்சர்!
எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், அரசின் சில அமைச்சர்களும் எதிர்காலத்தில் சிறை செல்லக்கூடும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் உதய கம்மன்பில கூறுகையில்,
சொத்து மற்றும் பொறுப்பு பற்றிய விபரங்களை வெளிப்படுத்துவதற்காக நாங்கள் கொண்டு வந்த சட்டத்தால் தேசிய மக்கள் சக்தி அரசு கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
பயணத்துக்கான செலவு விவரங்கள்
இந்தச் சட்டத்தின் ஊடாக தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்த நேரிடும் என்று தேசிய மக்கள் சக்தியினர் கடந்த காலங்களில் அறிந்திருக்கவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டனுக்குச் சென்றிருந்தார். இந்தப் பயணத்துக்கான செலவு விவரங்கள் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விவரங்களில் குறிப்பிடப்படவில்லை.
அதேபோல் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் என்ற அடிப்படையில் இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்திருந்தார்.
இந்தப் பயணங்களுக்கான செலவு விவரங்களும் வெளிப்படுத்தப்படவில்லை. ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்படி, தமக்குப் பரிசாகவோ அல்லது வேறு வழிமுறைகளிலோ ஏதேனும் சலுகைகள் கிடைக்கப் பெறுமாயின் அதன் விவரங்களையும் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விவரத் திரட்டில் உள்ளடக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, சொத்துக்கள் மற்றும் சலுகைகளை மறைத்த குற்றத்துக்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சிறை செல்ல வாய்ப்புள்ளதாகவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.