அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை நீதிமன்றத்தில் முன்வையுங்கள் ; நளிந்த ஜெயதிஸ்ஸ
அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை நீதிமன்றத்தில் முன்வையுங்கள். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் போலி செய்திகளை உருவாக்கி மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தியவர்களை எம்மால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியும். நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதை விட, நீதிமன்றம் செல்வதே சிறந்ததாகவும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போது நேற்று (16) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தித்வா புயல்
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தித்வா புயல் தொடர்பில் எம்மால் கூறப்பட்ட விடயங்களையே வானிலை அவதானிப்பாளர்கள் சங்கமும் எழுத்து மூலம் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறது.
நவம்பர் 12ஆம் திகதியிலிருந்து இது குறித்து முன்னறிவித்தல் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதற்கமைய 27ஆம் திகதி சூறாவளி ஏற்பட்டதாகவும் சில ஊடகங்களால் போலி செய்திகள் உருவாக்கப்பட்டன.
இது குறித்த போலி செய்திகளை மேலும் மேலும் பிரசாரப்படுத்துவதன் மூலம் இந்த பேரழிவிலிருந்து நாடு மீளக் கட்டியெழுப்பப்படுவதற்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
எனவே இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு ஊடகங்களை வலியுறுத்துகின்றோம். அது மாத்திரமின்றி இது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதை விட, நீதிமன்றத்துக்குச் செல்வது மேல் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.