16ஆம் திகதி ஆளுநராகிறார் கப்ரால்! தயாராகும் விசேட வர்த்தமானி
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இன்று அல்லது ஓரிரு தினங்களில் தற்போதைய வங்கி ஆளுநர் பதவியிலுள்ள டபிள்யூ. டி லக்ஷ்மன் மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து கப்ரால் ஆகியோர் பதவிகளை இராஜினாமா செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்காக விசேட அமைச்சரவைப் பத்திரமொன்று அஜித் நிவாட் கப்ராலுக்காகத் தயாராகி வருகின்றது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்பதாயின் சில நிபந்தனைகளை விதித்திருந்த கப்ரால், அதன்படி மத்திய வங்கியின் ஆளுநராக தாம் பொறுப்பேற்றால், அமைச்சருக்கு இருக்கின்ற அதிகாரங்கள், வரப்பிரசாதங்களையும் அவர் கேட்டிருந்தார்.
இவற்றை வழங்குவதற்காகவே தற்போது விசேட வர்த்தமானி அறிவிப்பு தயாரிக்கப்படுவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.