பிரபாகரன் உயிருடன்... ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுக்குமா?
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்றைய தினம் (14-02-2023) தெரிவித்த கருத்து, பல்வேறு சர்ச்சைகளையும் மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழ.நெடுமாறனின் வெளியிட்ட கருத்தானது, இலங்கை அரசியலில் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், இலங்கை அரசியல் களத்தில் அது தற்போது வரை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.
பிரபாகரன் உயிருடன் உள்ளதாக கூறப்படும் கருத்தானது, தமிழக அரசியல் களத்தில் பேசுப் பொருளாக மாறிய போதிலும், இலங்கை அரசியல் களத்தில் இந்த நொடி வரை, இது பேசுப்பொருளாக மாற்றம் பெறவில்லை என பலரும் கருதுகிறார்கள்.
இருப்பினும், பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் வெளியிட்ட கருத்து, ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்று அதிகம் பேசப்படுகின்றது.
2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை கைப்பற்றிய போது, 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழித்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, (Gotabaya Rajapaksa) அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) ஆகியோரே விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தார்கள் என்பது, அவர்களது அரசியலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.
குறிப்பாக 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு, விடுதலைப் புலிகளின் பின்னடைவு பிரதான காரணமாக அமைந்திருந்தது.
மேலும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக தெரிவாவதற்கும், விடுதலைப் புலிகளின் பின்னடைவு பிரதான காரணமாக அமைந்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டு வெடிப்பை அடுத்து, நாட்டின் மீண்டுமொரு பயங்கரவாதம் உருவெடுத்துள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டது.
விடுதலைப் புலிகளை அழித்தவர்கள், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள் என பெரும்பான்மை சிங்கள மக்கள் ராஜபக்ஷ குடும்பத்தின் மீது நம்பிக்கை வைத்து, கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்திருந்தனர்.
இருப்பினும், இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளதார நெருக்கடிக்கு ராஜபக்ஷ ஆட்சியே காரணம் என தெரிவித்து, கடந்த ஆண்டு பாரிய போராட்டங்களின் ஊடாக ராஜபக்ஷ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர இலங்கை மக்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
ராஜபக்ஷ ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், ஓரிரு மாதங்களிலேயே ராஜபக்ஷ குடும்பத்தினர் தமது அரசியல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்தனர்.
இவ்வாறு தமது அரசியல் நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்து வரும் ராஜபக்ஷ குடும்பம், பழ.நெடுமாறனின் கருத்தை பயன்படுத்தி, மீண்டும் ஆட்சி பீடத்தை கைப்பற்றுமா என்ற கேள்வி பலரது மனங்களில் எழுந்துள்ளன.
வாக்குவங்கியை அதிகரித்துக் கொள்வார்களா? இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான பரமேஸ்வரன் விக்னேஸ்வரனிடம் சர்வதேச ஊடகம் ஒன்று வினவியது.
விடுதலைப் புலிகளை இல்லாதொழித்ததாக கூறியே, ராஜபக்ஷ குடும்பம் அரசியல் செயற்பாடுகளை கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்தது. விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் செய்யப்படுகின்றதை போன்றதொரு கருத்து தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்தானது, ராஜபக்ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சி பீடத்திற்கு கொண்டு வர வழிவகுக்குமா?
பதில் :- முதலில் ஒன்றை சொல்ல வேண்டும். இதனை ராஜபக்ஷ குடும்பம் திட்டமிட்டு செய்ததா என்று எடுத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு எடுத்துக்கொள்வதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால் பழ.நெடுமாறன் சொல்லியிருக்கும் விடயத்தை பார்க்க வேண்டும்.
''ராஜபக்ஷவின் ஆட்சிக் காலம் முடிவடைந்து விட்டது. மக்களே அவரை விரட்டியடித்து விட்டார்கள். பிரபாகரன் வெளியில் வருவதற்கு இது தான் சரியான தருணம்" என பழ.நெடுமாறன் வெளியிட்ட கூற்று, நிச்சயமாக ராஜபக்ஷ ஆதரவாளர்களுக்கு ஒரு வைட்டமின் கொடுத்ததை போன்றாகும்.
காரணம் என்னவென்றால், அதனை பயன்படுத்தி, மறுபடி அதனை பிரசாரமாக்குவார்கள். முக்கியமாக இப்போதுள்ள அரசியல் சூழலில், காணி அதிகாரம், போலீஸ் அதிகாரம் தொடர்பிலான கருத்தாடல்கள் இடம்பெற்று வரும் சூழலில், ராஜபக்ஷ வந்தால் தான் இதனை தீர்க்க முடியும் என்ற பிரசாரத்தை கொண்டு செல்வதற்கான வாய்ப்பாக இது அமையும் என நான் நினைக்கின்றேன்.
ராஜபக்ஷ குடும்பம், அடுத்த தேர்தலில் பழ.நெடுமாறனின் கருத்தை பிரசாரமாக பயன்படுத்துமா?
பதில் : ஆம். பயன்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். மீண்டும் பிரபாகரன் வருவதாக சொல்லப்படுகின்றது.
ராஜபக்ஷ இல்லாது போனமை, புலிகளின் மீள் உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கும். ராஜபக்ஷவினாலேயே புலிகளை இல்லாது செய்ய முடியும். போன்ற பிரசாரங்களை கண்டிப்பாக கொண்டு செல்ல முடியும்.
ராஜபக்ஷ குடும்பத்தை விட, பிரபாகரன் இருந்தால் நல்லது என்ற வசனத்தை காலி முகத்திடல் போராட்ட களத்தில் பலரும் கூறியிருந்தார்கள். விடுதலைப் புலிகள் இருந்த சந்தர்ப்பத்தில் கூட, இதை விடவும் நிம்மதியாக இருந்தோம். போன்ற வசனங்களை பயன்படுத்தியிருந்தார்கள். இப்படியாக ஒரு எண்ணம் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற தருணத்தில், பழ.நெடுமாறனின் கருத்தை பிரசாரமாக பயன்படுத்தினால், ராஜபக்ஷவிற்கு அது வெற்றியளிக்குமா?
இதனை பெரும் மனப்பாங்குடன் பார்க்க வேண்டும். காலி முகத்திடல் போராட்ட சந்தர்ப்பத்தில் அல்லது அந்த காலப் பகுதியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள், முழுமையாக சிங்கள மக்களை பிரதிபலித்தது என ஏற்றுக்கொள்ள முடியாது என பல தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் கூறியிருந்தார்கள்.
அது மக்கள் ஆதங்கத்தின் உச்சக்கட்டத்தில் இருந்த தருணம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் மிக வெறுப்படைந்திருந்த காலம் அது. அந்த தருணத்தில் ஆதங்கத்தில் இருந்தவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார்கள்.
இது சிங்கள மக்களின் முழுமையான நிலைப்பாடு என்று எடுத்துக்கொள்வது, அவ்வளவு பொருத்தமானதாக இருக்காது என்பதே என்னுடைய கருத்து. அதேநேரத்தில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்களே இந்த பிரசாரத்தை கொண்டு செல்வார்கள் என கூறுகின்றேன்.
ராஜபக்ஷவிற்கு இப்போது கூட, நூற்றுக்கு நூறு வீதம் ஆதரவாளர்கள் இல்லை என்று கூற முடியாது. இப்போதும் ராஜபக்ஷவிற்கு ஆதரவு இருக்கின்றது. அந்த ஆதரவை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு இந்த தலைமுறையினால் முடியாது என்று நான் நினைக்கின்றேன்.
ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் நிச்சயமாக இதை வைத்து பிரசாரம் மேற்கொள்வார்கள். எனினும், இந்த பிரசாரத்தின் ஊடாக எந்தளவு வாக்குகளை சேர்க்க முடியும் என்பது கேள்வி குறியான விடயம் தான்.
கேள்வி :- 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி, மேற்கொண்ட பிரசாரத்தின் ஊடாகவே அப்போது கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். அதேபோன்று விடுதலை புலிகளை பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிப்பார்களா?
பதில் :- ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு தருணத்தில், கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக சர்வதேச ஊடகமொன்றுக்கு பேட்டியொன்றை வழங்கியிருந்தார். நான் அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன் என கூறியிருந்தார்.
ஈஸ்டர் தாக்குதல் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு வழிவகுத்தது என்பது வெளிப்படையான உண்மை. அந்த தருணத்தில் மக்கள் மத்தியில் அச்சம் வந்தது.
அந்த தருணத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என சிங்கள மக்கள் நம்பினார்கள். ஆனால் அதற்கு பின்னர் ஒரு சகத்திற்கு எதிராக பிரசாரமாக அதனை பயன்படுத்தினார்கள். அது வேறுவிடயம்.
இப்போது இருக்கின்ற சூழ்நிலையில், ஒரு தரப்பை தாழ்த்தி, இன்னுமொரு தரப்பை உயர்த்தி மேற்கொள்ளப்படும் பிரசாரம் எந்தளவிற்கு வெற்றியளிக்கும் என்பதில் சந்தேகம் உள்ளது.
இப்போது இனவாத போக்கு, சமுகவாத போக்கு, ஜாதிகள் என்ற அடிப்படையிலிருந்து மக்கள் வெளியில் வந்துள்ளார்கள். பொருளாதார ரீதியில் ஸ்திரமடைய வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் இருக்கின்றார்கள்.
பெரும்பாலான மக்கள் மத்தியில் இது பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளப்படுமா என்பது சந்தேகம். இந்த அறிவிப்பு நேற்று இரண்டு மணிக்கு முன்பே வெளியாகியிருந்தது.
இருப்பினும், இந்த நிமிடம் வரை பெரும்பாலான சிங்கள தரப்பிலிருந்து எந்தவித எதிர்ப்பும் அல்லது எதிராக கருத்தும் வெளியிடப்படவில்லை. எனினும், பழ.நெடுமாறன் கருத்து வெளியிட்டு, சில மணிநேரத்திலேயே சர்வதேச ஊடகங்கள், ராணுவத்தின் பதிலை எடுத்து, செய்திகளை வெளியிட்டிருந்தன.
ஆனால், இதுவரை பெரும்பான்மை அரசியல் தரப்பிலிருந்து விமர்சனங்களோ, கருத்துக்களோ வெளியிடப்படவில்லை. இந்த காலத்தில் இது பொருத்தமற்ற ஒன்று என அவர்கள் எண்ணுகின்றார்களோ என்ற சந்தேகம் என் மனதில் ஓடுகின்றது.
ஆகவே, பெரியளவிற்கு இதனை பிரசாரமாக கொண்டு போவதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கின்றேன். ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு இந்த விடயம் போதுமாக அமையாது.