பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த நபர்; ஷாக் கொடுத்த உடற்கூற்று பரிசோதனை !
ஹோமாகம தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் தடுப்புச் சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த 29 வயதுடைய இஷார ஹர்ஷ குமார என்ற ஒரு பிள்ளையின் தந்தையின் மரணம் மூளையின் உட்பகுதியில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாகவே ஏற்பட்டுள்ளதாகப் உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் உடற்கூற்றுப் பரிசோதனை இன்று (27) களுபோவில வைத்தியசாலையில் நடைபெற்றது.

பொலிஸ் அதிகாரிகள் மனிதாபிமானமற்ற தாக்குதல்
கிரீவத்துடுவ மூனமலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞனின் மரணம் தொடர்பாகவும் அவருடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞர் மீது பொலிஸ் அதிகாரிகள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தியது தொடர்பாகவும் ஹோமாகம பொலிசாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இரண்டு உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உயிரிழந்த இஷார ஹர்ஷ குமாரவின் சகோதரரும் அவருடன் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய இளைஞனின் மனைவியும் தனித்தனியாக இந்த இரண்டு முறைப்பாடுகளையும் தாக்கல் செய்துள்ளனர்.
மரணம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் ஹோமாகம தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.அத்தோடு இஷாரவின் மனைவியும் பாரிய குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.