கூடியது யாழ்.மாவட்ட கொவிட் தடுப்புச் செயலணி ; பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வு
யாழ்.மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி இன்று காலை 10 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் கூடியுள்ளது.
மாவட்டத்தில் அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை சற்று குறைவடைந்த நிலையில் கடந்த வாரத்திலிருந்து அந்த எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந் நிலையில் எடுக்கப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் , தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக டெங்கு தொற்று நிலைமை மற்றும் அனர்த்த முகாமைத்துவ விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், 51வது பிரிவின் இராணுவத்தளபதி சந்தன விக்ரமசிங்க, யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர், முப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், உள்ளூராட்சி சபைத் தலைவர்கள், சுகாதார அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


