அரசியலைத் தாண்டி மனிதநேயம் ; வெனிசுலா விவகாரத்தில் போப் லியோ ஆழ்ந்த கவலை
வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்டுள்ள பின்னணியில், வெனிசுலாவில் உருவாகியுள்ள அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பில் போப் லியோ XIV ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில்,
வெனிசுலாவில் நடைபெறும் முன்னேற்றங்களை தாம் மிகுந்த கவலையுடன் தொடர்ந்து கவனித்து வருவதாக போப் தெரிவித்துள்ளார்.
அன்பான வெனிசுலா மக்களின் நலன், பிற எல்லா அரசியல் அல்லது கருத்தியல் அணுகுமுறைகளை விட மேலோங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், வன்முறையைத் தாண்டி நீதி மற்றும் அமைதியின் பாதையில் நாடு முன்னேற வேண்டும் என்றும், வெனிசுலாவின் இறையாண்மை உறுதிப்படுத்தப்படுவதுடன், அதன் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் போப் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு நபரின் மனித மற்றும் குடிமை உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒத்துழைப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அமைதியான எதிர்காலத்தை உருவாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், குறிப்பாக கடுமையான பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் போப் லியோ XIV வலியுறுத்தினார்.
இவை அனைத்தும் நடைமுறையில் நிறைவேற வேண்டி தாம் பிரார்த்தனை செய்வதாகக் கூறிய போப், கொரோமோட்டோ அன்னையும், புனிதர்கள் ஜோஸ் கிரிகோரியோ ஹெர்னாண்டஸ் மற்றும் கார்மென் ரெண்டிலஸ் ஆகியோரின் நடுவே வெனிசுலா மக்களுக்கான பிரார்த்தனைகளை ஒப்படைப்பதாக தெரிவித்தார்.
மேலும், உலக மக்களையும் வெனிசுலாவிற்காக பிரார்த்தனை செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.