அடுத்தடுத்து விசாரணைகளில் சிக்கப்போகும் அரசியல் பிரபலங்கள் ; தயாராகும் பட்டியல்
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சம்பவங்கள் தொடர்பில் சாமர சம்பத்தை போன்று பட்டியலில் இன்னும் பலர் இருப்பதாகவும் சிறிது காலம் செல்லும்போது ஒவ்வொருவர் மீதான விசாரணைகள் ஆரம்பமாகுமென்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சாமர சம்பத் மாத்திரமல்ல இன்னும் பலர் பட்டியலில் இருக்கிறார்கள். கடந்த அரசாங்கத்தின் மீது மற்றும் இலஞ்ச ஊழல் தொடர்பில் 135 குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வித விசாரணையும் முன்னெடுக்கவில்லை. அதனுடன் தொடர்புடைய அரச அதிகாரிகள் அரசியலுடன் சம்பந்தப்பட்டிருந்தமையே அதற்கு காரணமென சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், அரச நிறுவனங்களின் செயற்பாடுகளின் நாங்கள் எந்தவிதத்திலும் தலையிடுவதில்லை. அரச நிறுவனங்களை சுயாதீனப்படுத்தி, பலப்படுத்தி, அவர்களுக்கு தேவையான பணியாளர்களை பெற்றுக்கொடுத்து அவர்களின் அதிகபட்ச வினைத்திறனை செயற்படுத்துமாறே ஆலோசனை வழங்கியுள்ளோம்.
எனவே, இன்னும் சிறிது காலமாகும்போது அரசியல் பிரபலங்களில் மாதத்துக்கு இருவர் மற்றும் மூவரின் பெயர் இவ்வாறு விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.