சோதனைக்கு உட்படுத்தும்போது பயணியிடம் திருடிய பொலிஸ்!
பஸ் நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்த பயணியை சோதனைக்கு உட்படுத்துதல் எனும் பெயரில், அவருடைய மேற்சட்டை பையில் இருந்து, 21 ஆயிரத்து 540 ரூபாயை களவாடிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தெனியாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான பொலிஸ் சார்ஜன்ட், இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த போது, பஸ் நிறுத்துமிடத்தில் நின்றிருந்த நபரை, சந்தேகத்தின் பேரில் சோதனைக்கு உட்படுத்தி உள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அவ்வாறு உடல், உடமை சோதனை மேற்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட், அங்கிருந்து கிளம்பி விட்டார். அதன் பின்னர், தன்னுடைய மேற்சட்டை பொக்கட்டை தட்டி பார்த்த பயணிக்கு, அதிர்ச்சியளித்தது.
தான் வைத்திருந்த பணம் காணாமல் போனதை உணர்ந்த அந்த பயணி, தெனியாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்
பயணியின் முறைப்பாட்டுக்கு அமைய, அன்றைய தினம் இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.