வாகன ஓட்டுநர்களுக்கு வெளியான உத்தியோகபூர்வ காவல்துறை எச்சரிக்கை
சிசிடிவி (CCTV) கமெராக்கள் மூலம் கண்டறியப்படும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறி, போலியான குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செய்திகள் போலியான தொலைபேசி எண்களிலிருந்து அனுப்பப்படுவதுடன், அவை இலங்கை காவல்துறையினரால் அனுப்பப்பட்டவை போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்திகளைப் பெறுபவர்கள் ஒரு மோசடி இணையதளத்திற்கு வழிநடத்தப்பட்டு, அங்கு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதப் பணத்தை செலுத்துமாறு கோரப்படுவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில், அதிகாரப்பூர்வ ‘GovPay’ கட்டண தளத்தை ஒத்த வகையில் இந்த போலி இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த இணையதளத்தின் ஊடாக பணம் செலுத்த முயற்சிக்கும் நபர்களின் கடன் அட்டை (Credit Card) விபரங்கள் உள்ளிட்ட இரகசிய தகவல்கள் மோசடிக்காரர்களால் திருடப்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே, SMS அல்லது வாட்ஸ்அப் மூலம் கிடைக்கும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை திறக்க வேண்டாம் என்றும், இவ்வாறான செய்திகளைப் பெறும் போது மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும் காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், காவல்துறை உத்தியோகத்தரால் உத்தியோகபூர்வமாக குற்றம் சாட்டப்பட்டு, ‘GovPay’ அமைப்பின் ஊடாக வழங்கப்படும் உத்தியோகபூர்வ அபராதப் பத்திரத்தின் (Fine Slip) அடிப்படையிலேயே போக்குவரத்து அபராதங்கள் செலுத்தப்பட வேண்டும் என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.