மாத்தறை துப்பாக்கி சூடு தொடர்பில் பொலிஸார் சந்தேகம்
மாத்தறை – தேவேந்திரமுனையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்த சம்பவம் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை குற்றவியல் விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கவுள்ளதாக கந்தர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள்வழக்கு
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரண்டு பேரில் ஒருவர் மீது ஏற்கனவே போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் 'பாலே மல்லி' என்ற குற்றவாளிக்கும் இடையிலான தகராறின் விளைவாக இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தின் தெற்கு வாயிலுக்கு முன்னால் உள்ள சிங்காசன வீதியில் இடம்பெற்றுள்ளது.
வேனில் வந்த ஒரு குழு, இரண்டு இளைஞர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை அவர்களின் வாகனத்தின் மீது மோதச் செய்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் T-56 ரக துப்பாக்கி மற்றும் பிஸ்டல் ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த வேன் பின்னர் கொலை நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் ஒரு கிளை வீதியில் தீ வைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெவினுவர, கபுகம்புர பகுதியி வீடொன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான பசிந்து தாரக மற்றும் யோமேஷ் நதீஷன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து 39, T-56 தோட்டா உறைகளையும், 2, 9mm தோட்டா உறைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் மாத்தறை மேலதிக நீதவான் மாலன் ஷிரான் ஜயசூரிய இன்று (22) காலை நீதவான் விசாரணையை மேற்கொண்டார்.
மேலும் சம்பவம் குறித்து பல பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.