காவல் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம் ; சாட்சிப் புத்தகத்தை கிழித்து மென்ற நபர்
மஹவ தலைமையக காவல் நிலையத்தில், முறைப்பாட்டு பதிவு புத்தகத்தின் இரண்டு பக்கங்களைக் கிழித்து, வாய்க்குள் இட்டு மென்றதாக கூறப்படும் முறைப்பாட்டாளர் ஒருவருக்கு பிணையில் செல்ல மஹவ நீதவான் நீதிமன்றம் இன்று (27) அனுமதி வழங்கியது.
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நபர் மஹவ, பொல்கடுவவைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் கடமையைத் தடுத்தமை மற்றும் அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமக்கு எதிராக அவதூறு பரப்பியதாக இருவருக்கு எதிராக குறித்த நபர் மஹவ காவல்நிலையத்தின் பலவித முறைப்பாட்டு பிரிவில் முறைப்பாடு அளித்திருந்தார்.
முறைப்பாட்டாளர் முதல் நாள் காவல் நிலையத்தில் முன்னிலையாகாததால் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற தரப்பினரை எச்சரித்த பின்னர் வாக்குமூலங்களைப் பதிவு செய்து அவர்களை விடுவிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், பின்னர் காவல்நிலையத்துக்கு வந்த முறைப்பாட்டாளர், இந்த முறைப்பாட்டை மேலும் தொடரக் கூடாது என்றும், அதை மீளபெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி, காவல்துறையினர் முறைப்பாட்டை முடிவுறுத்தினர். எனினும் பின்னர், சந்தேக நபர் காவல்துறையினரை அணுகி, முறைப்பாட்டை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கூறியதுடன், முறைப்பாட்டை பார்க்க விரும்புவதாகக் கூறி, காவல்துறையினரின் முறைப்பாட்டு புத்தகத்தின் இரண்டு பக்கங்களைக் கிழித்து வாய்க்குள் இட்டு மென்றதாக கூறப்படுகிறது