யாழில் 8.5 கோடி ரூபாய் சொத்துக்கு நேரந்த கதி ; திடீர் பணக்காரருக்கு அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 8.5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களை முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, யாழ்ப்பாண நீதிமன்றப் பொறுப்பிலுள்ள 15 மில்லியன் ரூபா பணமும், யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 70 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இருமாடி வீடொன்றும் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று வியாழக்கிழமை (15) முதல் அமலுக்கு வரும் வகையில் 14 நாட்களுக்கு இந்த முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாண விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் 15 மில்லியன் ரூபா பணத்தைச் வைத் திருந்த ஐந்து நபர்கள் லொறி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுப் கோப்பாய் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, சந்தேகநபர்களில் ஒருவரான யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி 7 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான இருமாடி வீடொன்றைக் கட்டியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றது.