டிக்கோயா தம்பதி கொலை; கேக் வெட்டி கொண்டாட்டம்!
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் கடந்த மே 21-ஆம் திகதி அரங்கேறிய கொடூர இரட்டைக் கொலை சம்பவத்தில், மிகக் குறுகிய காலப்பகுதியில் சந்தேக நபரைக் கைது செய்து, வழக்கு ஆதாரங்களை மீட்டெடுத்த பொலிஸ் அதிகாரிகள் இன்று (மே 26) கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கை காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், இந்த அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, கடமை உணர்வு மற்றும் தனித்துவமான திறமைகளைப் பாராட்டும் விசேட நிகழ்வொன்று ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

48 மணித்தியாலங்களுக்குள் வெற்றிகரமாகக் கையாண்ட விசாரணை
டிக்கோயா வர்த்தக நிலையம் ஒன்றினுள் காலிமுத்து சக்திவேல் (85 வயது) மற்றும் அவரது மனைவியான சகுந்தலா தேவி (82 வயது) ஆகிய தம்பதியினர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
அத்துடன், அவர்களிடமிருந்து சுமார் 18 பவுன் தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டிருந்தன. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்ட ஹட்டன் பொலிஸார், பொதுமக்களிடமிருந்து கிடைத்த ரகசியத் தகவல்கள் மற்றும் சிசிடிவி (CCTV) காட்சிகளின் ஆதாரங்களின் அடிப்படையில், கடந்த மே 23-ஆம் திகதி பொகவந்தலாவை பகுதியில் வைத்து சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
பதுளை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பிரதான சந்தேகநபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டனர். பிரதான சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வரும் ஜூன் மாதம் 2-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொள்ளை மற்றும் கொலை வழக்கை, நவீன புலனாய்வு உத்திகளைக் கையாண்டு 48 மணித்தியாலங்களுக்குள் வெற்றிகரமாகக் கையாண்ட விசாரணை அதிகாரிகளின் துரித செயல்பாட்டினைப் பாராட்டியே இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.