குற்றச்செயல் தொடர்புடைய இருவருடன் மதுபானம் அருந்திய பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இருவருடன் இணைந்து மதுபானம் அருந்தியதாகக் கூறப்படும் வவுணதீவு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கொஸ்தாப்பல் ஒருவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், கடந்த செவ்வாய்க்கிழமை (29) இரவு கன்னங்குடா பகுதியைச் சேர்ந்த 31 வயதான கு. ஜனுஷன் மற்றும் 36 வயதான அ. யோகேஸ்வரன் ஆகிய இருவருடன் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளார்.

இதன்போது, ஜனுஷனுக்கும் யோகேஸ்வரனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் பலத்த காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த இருவரும் கசிப்பு விற்பனை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தரும் அவர்களுடன் இணைந்து மதுபானம் அருந்தியிருந்ததுடன், கடுமையான மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பு பேணி, அவர்களுடன் மதுபானம் அருந்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியில் இருந்து இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.