நீதிமன்றச் சிக்கல்களுக்கு தீர்வாக காவல்துறைக்கு சட்டப் பயிற்சி தேவை
நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கும், சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் காவல்துறை அதிகாரிகளுக்குச் சட்ட ரீதியான போதிய பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் அவசியம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நீதவான் நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் மற்றும் சட்டத்துறை வல்லுநர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், காவல்துறை அதிகாரிகளே வழக்குகளை முன்வைப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை விளக்கினார்.
குறிப்பாக, நீதிமன்ற விவகாரங்களில் பொறுப்பாகவுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனைச் சட்டக் கோவை, குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை மற்றும் சான்று சட்டக் கோவை ஆகியன குறித்த தெளிவான பயிற்சி இல்லாமை வழக்குகளை முடிப்பதில் தாமதத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனை நிவர்த்தி செய்வதற்காக, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் நீதிமன்ற அனுபவம் கொண்ட சட்டத்தரணிகளை உதவி காவல்துறை அத்தியட்சகர்களாக (ASP) நியமிக்கலாம் என்ற ஆலோசனையை அவர் முன்வைத்துள்ளார்.
இத்தகைய நியமனங்கள் மூலம், ஒவ்வொரு காவல்துறை பிரிவிலும் நீதிமன்றங்களில் சட்ட ரீதியான பணிகளைத் திறம்பட மேற்கொள்ள முடிவதோடு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் தேவையை ஒவ்வொரு சிறிய வழக்குகளுக்கும் நாட வேண்டிய அவசியமும் இருக்காது என அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், தண்டப் பணத்தை வசூலிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டு வீதிப் போக்குவரத்துக் குற்றங்களில் மட்டும் காவல்துறை அதிக கவனம் செலுத்துவது அவர்களின் மீதான நன்மதிப்பைக் குறைப்பதாக ரவூப் ஹக்கீம் விமர்சித்தார்.
அரசின் வருமானத்தை விட, குற்றச் செயல்களைக் குறைப்பதிலேயே காவல்துறை அதிக அக்கறை காட்ட வேண்டும் என வலியுறுத்திய அவர், நீதிமன்ற வழக்குகளை விரைவாகவும் நீதியாகவும் முடிப்பதற்குப் படிப்படியாகச் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும், இன்னும் செய்ய வேண்டிய மாற்றங்கள் ஏராளமாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.