இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் ; பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
மீகஹதென்ன பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விக்ரமநாயக்க கருணாரத்னகே தர்ஷன திவங்க என்ற நபர், கடந்த ஏப்ரல் மாதம் மானம்பிட்டிய மற்றும் வெலிகந்த பகுதிகளுக்குச் செல்வதாகத் தனது வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

விசாரணைகள்
எனினும், அவர் வீட்டை விட்டுச் சென்றதன் பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை என்பதுடன், அவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என அவரது தந்தை மீகஹதென்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து, குறித்த நபரைக் கண்டறிவதற்கான விசாரணைகளை மீகஹதென்ன பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போன நபர், சுமார் 5 அடி 4 அங்குல உயரம் கொண்டவர், கருமையான நிறம், மெலிந்த உடல்வாகு மற்றும் குட்டையான தலைமுடியைக் கொண்டவர் என அடையாள விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் 071-8591706 அல்லது 034-2284022 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், காணாமல் போன நபரைக் கண்டறிவதற்கு உதவுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடக நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.