யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
பருத்தித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் தண்டம் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள உணவு கையாளும் நிலையங்களில் கடந்த 3ஆம் திகதி பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் திடீர் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

நீதிமன்ற உத்தரவு
இதன்போது, குறித்த உணவகங்களில், எலிகளின் நடமாட்டம் காணப்படும் இடங்களில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தமை, கழிவுநீரை வெளிச்சூழலில் வெளியேற்றி, நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கியமை, நச்சுப் பதார்த்தங்கள் உணவுடன் கலப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான உணவுப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தியமை, றெஜிபோம் பெட்டிகளில் சூடான ரொட்டிகளைச் சேமித்து வைத்தமை போன்ற பாரதூரமான சுகாதார விதிமுறை மீறல்கள் அவதானிக்கப்பட்டன.
இக்குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தினால் 40ஆயிரம் 30ஆயிரம் மற்றும் 10ஆயிரம் ரூபாய் என மூன்று உணவகங்களுக்கும் 80ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.