கசிப்பு உற்பத்தியை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸாருக்கு குளவி கொட்டு
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுக்கு ரம்பட பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அதனைச் சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் குழுவினர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று (01) இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஏழு பொலிஸார் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் கசிப்பு காய்ச்சப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, ரம்பட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதன்போது, அங்குள்ள மரமொன்றிலிருந்த குளவிக் கூடு கலைந்து பொலிஸாரைத் தாக்கியுள்ளது.
முதற்கட்டமாக, படுகாயமடைந்த மூன்று பொலிஸார் '1990' சுவசரிய ஆம்புலன்ஸ் சேவை மூலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மேலும் நான்கு பொலிஸார் காயமடைந்த நிலையில் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இக்குளவிக் கூடு தானாகக் கலைந்ததா அல்லது சுற்றிவளைப்பைத் திசைதிருப்புவதற்காகச் சந்தேகநபர்களால் திட்டமிட்டு கலைக்கப்பட்டதா என்பது குறித்து ரம்பட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.