அமெரிக்க தளத்தை அதிரவைத்த தாக்குதல்; ஈராக்கில் பெரும் பதற்றம்
ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட அடுத்தடுத்த தாக்குதல்களால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
குர்திஸ்தான் பிராந்தியத்தின் தஹுக் மாகாணத்தில் அமைந்துள்ள சர்சாங் எண்ணெய் வயல் மீது ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்தி தெரிவிக்கின்றது.

ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல்
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட 'HKN Energy' நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இந்த எண்ணெய் வயல் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அங்கு எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இயற்கை வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குர்திஸ்தான் பிராந்தியத்தின் தலைநகரான எர்பில் நகருக்கு அருகிலுள்ள மோட்டார் எண்ணெய் சேமிப்பு கிடங்கு ஒன்றின் மீதும் இன்று (ஏப்ரல் 01) காலை ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் 'Castrol' நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் களஞ்சியத்தில் தாக்குதலையடுத்து பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், கரும்புகை மூட்டமும் காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே நிலவும் போர்ச் சூழலின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல்கள் பார்க்கப்படுகின்றன. ஈராக்கிலுள்ள சில ஆயுதக் குழுக்கள் இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகின்றது.