ஹோட்டலுக்குள் புகுந்து தாய், மகனை கைது செய்த பொலிஸார்! உண்மையில் நடந்தது என்ன?
மாத்தறை உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரையும் அவரது தாயையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் கீழ் திஹகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்ததாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மாத்தறை - திஹகொட பிரதேசத்தில் இயங்கி வரும் இந்த ஹோட்டலுக்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது.
ஹோட்டலில் சட்டவிரோத மதுபான வியாபாரம் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தி பொலிஸார் இவ்வாறு சென்றுள்ளனர்.
மேலும், ஹோட்டலின் உரிமையாளரின் தாயார் கைது செய்யப்பட்டதையடுத்து, அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஹோட்டல் உரிமையாளரின் தாயாரையும் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் ஹோட்டல் உரிமையாளரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த இடத்தில் ஒன்றரை லீற்றர் சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், ஹோட்டல் உரிமையாளரின் தாயாரிடமிருந்து 3 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக திஹாகொட பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் அழுத்தத்தின் கீழ், திஹகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் தமக்கும் தனது தாய்க்கும் எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக ஹோட்டலின் உரிமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து, திஹாகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விசாரித்த போது, ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், ஹோட்டல் உரிமையாளரின் தாயாருக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான பல வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதன்படி, ஹோட்டலின் உரிமையாளரும் அவரது தாயும் கடந்த தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஹோட்டல் உரிமையாளரின் தாயார் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் ஹோட்டல் உரிமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.