ஊடகவியலாளர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய பொலிஸார்
அமைப்பாறையில் ஊடகவியலாளர் ஒருவரை பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அம்பாறை அட்டாளைச்சேனை ஷாஹிர் ஹான் பாரூக் எனும் சுதந்திர ஊடகவியலாளர் மீது அக்கரைப்பற்று பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கி, ஒளிப்பதிவு கமராவை உடைத்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது. கடந்த 02.09.2021 திகதி காலை 11.00 மணியளவில் செய்தி சேகரிக்க செல்வதற்காக அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள தனது வீட்டிற்கு முன்னால் நின்றுகொண்டிருந்த போது குறித்த பகுதியால் சென்ற அக்கரைப்பற்று பொலிசார் குறித்த ஊடகவியலாளரையும் அவரது தம்பியையும் தாக்கியுள்ளனர்.
அட்டாளைச்சேனையில் தனது செய்தி சேகரிப்பு நடவடிக்கைக்கு செல்ல வீட்டில் இருந்து வெளியேறும் போது முகக்கவசம் சரியான முறையில் போடவில்லை என்பதற்க்காக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் கொரோனாவுக்கு மத்தியிலும் தமது உயிரை பணயம் வைத்து மக்களுக்காக உண்மையை வெளிக்கொண்டு வருகின்ற நிலையில் அரசினாலும் பொலிஸாரினாலும் ஊடக அடக்குமுறை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.