பல்கலைகழக மாணவரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!
சமூக ஊடக செயற்பாட்டாளரும் பல்கலைக்கழக மாணவருமான திசர அநுருத்த பண்டார கைது செய்யப்பட்டு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
திசர அநுருத்த பண்டார கம்பளை- ஏத்கால பகுதியை சேர்ந்தவராவார். திசர அநுருத்த பண்டார தண்டனைக் கோவை சட்டத்தின் 120 ஆம் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்ததுடன் கொழும்பு 6 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
அதேவேளை இளம் ஊடகவியலாளரும் சமூக ஊடக பதிவாளருமான அனுருத்த பண்டார, அரசாங்கத்துக்கு எதிரான முகநூல் பக்கத்தின் பக்கத்தின் நிர்வாகியாக செயற்பட்டதாக கூறப்படுகிறது.
மோதரை பொலிஸில் இருந்து சென்றதாக கூறிக்கொள்ளும் குழுவினால் நேற்று இரவு அவர் கடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கருத்துச்சுதந்திரத்தையும் மாற்றுக்கருத்தையும் நசுக்குவதற்கு இலங்கையின் ஆட்சியாளர்கள் பயன்படுத்திய பயன்படுத்தக்கூடிய தெளிவற்ற பரந்துபட்ட சட்டவிதியை பயன்படுத்தி இளம் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார கைதுசெய்யப்பட்டதாக அம்பிகா சற்குணநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதோடு பண்டாரவின் எந்த செயல் அவர் கைதுசெய்யப்படுவதற்கு காரணமாக அமைந்தது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.