யாழில் பொலிஸார் அராஜகம்; தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட எம்பி மற்றும் சட்டத்தரணி(Photos)
யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் பிரபல சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்டோர் பொலிஸாரால் இழுத்துசெல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதி இன்று நடைபெற்று வருகின்றது.
பொலிஸார் தடை உத்தரவு
இந்நிலையில் இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி தமிழ்தேசிய மக்கள் முன்னணி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதனையடுத்து யாழ்.நகரில் சுதந்திர தினத்துக்கு எதிரான போராட்டங்கள், பேரணிகள் நடத்துவதை தடுப்பதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிஸார் தடை உத்தரவு பெற்றிருந்தனர். எனினும் தடை உத்தரவை மீறி இன்று மாலை தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்ப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்பட்டிருந்தது.
இதனை அடுத்து சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தை தடுக்க முயற்சிக்கப்பட்டபோதும் போராட்டம் தொடர்ந்த நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பிரபல சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் உள்ளிட்ட 18 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.






