தமிழர் பகுதியில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை ; 12 அதிவேக மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
கிளிநொச்சி பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் அதிவேகமாகப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களை கட்டுப்படுத்தும் நோக்கில், போக்குவரத்து பொலிஸாரால் விசேட அதிரடி வீதி சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீதி விபத்துக்களைத் தடுப்பதுடன், பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகன சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கடந்த இரு நாட்கள் இந்த விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டிருந்த 12 அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சோதனைகளில், வாகன இலக்கத் தகடுகள் இன்றி இயக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி ஓட்டப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக எதிர்காலத்திலும் இதுபோன்ற கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.