8 பெண்களிடம் நடத்தப்பட்ட செயல் ; சந்தேக நபருக்கு அதிரடி காட்டிய பொலிஸார்
இரத்மலானை பகுதியில் பெண்களின் தங்கச் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நுகேகொடை வலய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த, நுகேகொடை வலய குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குழுவினரால், மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணை
இவர் 46 வயதுடைய மஹரகம, பமுனுவ பகுதியைச் சேர்ந்தவராவார். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, குறித்த நபர் இரத்மலானை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் 8 பெண்களிடமிருந்து தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அத்தோடு இவ்வாறு திருடிச் சென்ற தங்க நகைகளை உருக்கிச் செய்யப்பட்ட தங்கத் துண்டுகள் 8, குற்றச் செயலுக்காக குறித்த நபரால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றும் போலி வாகன இலக்கத் தகடு ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சந்தேக நபர் தொடர்பில் நுகேகொடை வலய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.