யாழில் பெண்ணை இழிவாக நடத்தினாரா பொலிஸார்? பரபரப்பு குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில், லீசிங் தொகை செலுத்தாததாகக் கூறி மருதங்கேணி உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க மற்றும் லீசிங் நிறுவனத்தினர் தம்மை கொடுமைப்படுத்தியதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கட்டைக்காட்டைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கரைவலை மீன்பிடித் தொழிலுக்காக லீசிங் அடிப்படையில் உழவியந்திரம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறிப்பிட்ட காலக்கெடுவில் லீசிங் தொகை முழுமையாக செலுத்தப்படாததாகக் கூறி, லீசிங் நிறுவனத்தினர் மருதங்கேணி பொலிசாருடன் நேற்று (27) அந்தப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது, மருதங்கேணி உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க, பெண் என்பதையும் பொருட்படுத்தாமல் தம்மை கேவலமாக நடத்தியதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உழவியந்திரத்தை ஒப்படைக்காவிடில் தன்னையும் தனது குடும்பத்தினரையும் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்து சிறையில் அடைப்பதாக மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனுடன், விசாரணைக்காக வந்த பொலிசார் தமக்கு குளித்துவிட்டு உடை மாற்றிக்கொள்ளவும் அவகாசம் அளிக்காமல் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொய் குற்றச்சாட்டில் தன்னையும் குடும்பத்தினரையும் கைது செய்வதாக மிரட்டியுள்ளதாகவும், தனது குடும்பத்துக்கு ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பு உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க மற்றும் வீரசிங்க ஆகியோருக்கே எனவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.