ஆட்சி, பதவியை கைவிட்டு ஓடி ஒளிந்த மொட்டு! அறைகூவல் விடுத்த மைத்திரி
கடந்த காலங்களில் மக்களின் போராட்டத்தால் ஆட்சியையும், பதவிகளையும் கைவிட்டு ஓடி ஒளிந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, அடுத்த தேர்தலில் மக்கள் ஆணை கிடைக்காது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அடித்துக் கூறியுள்ளார்.
அடுத்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதே தமது கட்சியின் எதிர்பார்ப்பு எனவும், இதற்காக முற்போக்கு சிந்தனையுடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் மைத்திரிபால அறைகூவல் விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் (31-08-2023) ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
பெரமுன கட்சி எங்களுக்கு எந்த விதத்திலும் சவாலாக அமையாது, பதவிகளைவிட்டு ஓடி ஒளிந்தவர்களே அங்குள்ளனர்.
பிரதமர் பதவி விலகினர், அமைச்சரவை கலைந்தது. பலர் வெளிநாடு ஓடினர். இப்படியானவர்களுக்கு மக்கள் ஆணை இல்லை. ஆனாலும் தமக்கு மக்களை ஆணை இருப்பதுபோல் காண்பிப்பதற்கு முற்படுகின்றனர்.
மக்களை திரட்டிவந்து கூட்டங்களை நடத்துகின்றனர். அனைத்து முற்போக்கு சிந்தனை உடைய கட்சிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
புதியதொரு ஆட்சியை ஏற்படுத்த அணிதிரளுமாறு எமது கொள்கையுடன் ஒத்துபோகக்கூடிய, சமாந்தர கொள்கையுடைய இடதுசாரி சக்திகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம். அதனை அடிப்படையாகக்கொண்டே எமது கட்சி மாநாடு அமையும்.” – என்றார்.